வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

அதிர்ஷ்ட எண் - XIII ஈரோடு காமிக்ஸ் திருவிழா ( 6th day) 8-8-2013

ஈரோடு காமிக்ஸ் திருவிழா ( 6th day)
* வேலைப் பழு காரணமாக ( கவனிங்க கோவை செல்வராஜ்: எங்களுக்கும் வேலையிருக்கு) பகல்பொழுதில் அங்கே ஆஜராகமுடியாததாலும், பூனை இனத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டிவிட எடிட்டர் இன்று முடிவெடுத்துவிட்டதாலும் 'கிறுக்கும் பூனையார்' ஏகத்துக்கும் அப்செட்! :(
* இன்று காலையிலேயே நம் ஸ்டாலில் ஆஜராகிவிட்ட ஆட்டையாம்பட்டி ராஜ்குமார் ஆர்வமுடன் காமிக்ஸ் களப்பணியில் ஈடுபட்டு நம் ஸ்டாலிற்கு வருகை தந்த காமிக்ஸ் பிரியர்களிடம் பேச்சுக்கொடுத்து காமிக்ஸ் வளர்த்ததோடு, அண்ணாச்சி மற்றும் வேலுவுக்கு விற்பனையிலும் உதவியாய் இருந்தார்.
* ஆர்வமாய் வந்து நம்மிடம் அறிமுகம் செய்து கொண்ட மகேஷ் என்ற நண்பர் தன் அறிமுகத்தை முடிக்கும் முன்பே அவசர அவசரமாக "எனக்கு இரத்தப்படலம் 200 ரூபாய் புத்தகம் உடனே பத்து வேண்டும்" என்றார். அவரது அறியாமையை என்னவென்பது? அவர் 'ஒன்று மட்டும் வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கலாம்' என்றிருப்பேன்; 'இரண்டு வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'வாய்ப்பில்லை' என்றிருப்பேன். அவர் கேட்டதோ 'பத்து' என்பதால் எனக்கு குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சமாதானமடையாத அவர், நமது ஸ்டாலின் ஒரு பக்கத்தில் பேனராக ஒட்டப்பட்டிருந்த இரத்தப் படலம் போஸ்டரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். "எதற்காக இத்தனை?" என்று கேன்டதற்கு 'நண்பர்களிடம் விற்பனை செய்வதற்கு' என்றார். அவரிடம் மேற்கொண்டு ஏதும் கேட்டிட விருப்பமில்லாமல் போனது ஏனென்று தெரியவில்லை! "முழுத் தொகுப்பும் அடுத்த வருடங்களில் வண்ணத்தில் வர வாய்ப்பிருக்கிறது" என்று சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தேன்.
* மேற்கூறிய அதே சமாதானத்தை ஐம்பதைத் தொட்டுவிடும் வயதிலிருந்த வேறொருவரிடம் கூறியபோது "எனக்கு கலர்ல வேண்டாங்க; ப்ளாக் அண்டு வொய்ட்டில் தான் வேணும்" என்றார். சற்றே ஆச்சர்யமாகி "ஏன்?" என்றேன். "கருப்பு-வெள்ளைதாங்க கவர்ச்சி. அதிலே படிக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை" என்றார். இரத்தப் படலத்தின் ஒவ்வொரு ஓவியத்தையும் தான் வெகுவாக இரசித்திருப்பதாகவும், துரதிர்ஷட வசமாக அது தன்னிடம் இல்லாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
*இரத்தப்படலம் பற்றி எழுதும்போதுதான் நேற்று நான் சொல்ல மறந்த இன்னொரு விசயமும் ஞாபகம் வருகிறது. சிலர் சும்மாவேணும் ஏதாவது கேள்வி கேட்டு தகவல் சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். அம்'மாதிரி'யானவர்களுக்கு தங்களது கேள்வியின்மீதோ அல்லது சொல்லப்படும் பதிலின்மீதோ எந்தவொரு நோக்கமும் இருந்திடாது. அப்படிப்பட்ட, நடுத்தர வயதுள்ள ஒருவர், போகிற போக்கில் நம் ஸ்டாலில் ஒட்டியிருந்த இரத்தப்படலம் பேனரில் ஸ்டைலாக நின்றிருந்த XIIIஐ கூர்ந்து கவனித்துவிட்டு, "ஏங்க, இவரு பேரு என்ன?" என்றார். ஓரிரு வினாடிகள் தடுமாற்றத்திற்குப் பின் "இவரு பேரு ஜேஸன் மக்லேன். பதிமூனுன்னு சொல்வாங்க" என்றேன். "இது என்னமாதிரியான கதை?" என்றார். "அது வந்து... இவரு பேரு என்னன்னு இவரே கண்டுபிடிப்பார் - அதான் கதை" என்றேன். லேசாக முறைத்தவர் "இதுக்கெல்லாமா கதை எழுதுவாங்க; என்னமோ போங்க" என்று சொல்லி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினார்.
* காமிக்ஸ் மீது தணியாத ஆவல் கொண்ட பல புதிய நண்பர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தொடர்ந்து நம் ஸ்டாலை ஆக்கிரமித்தபடி இருந்தனர். அதில் பலர், காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்ததுமே உற்சாகமாகி, இதற்குமுன் ரொம்ப நாள் பழகியவர்கள் போல பேசுவதெல்லாம் நிச்சயம் இந்த 'காமிக்ஸ் பந்தத்தில்'அன்றி வேறு எதிலும்/எங்கும் கண்டிட முடியாது.
மொத்தத்தில், சற்றே வித்தியாசமான நாளிது என்பேன். ஏற்கனவே பத்தி பத்தியாக எழுதியாகிவிட்டது என்பதால், ஒரு வித்தியாசமான மனிதருடன் எனக்கு ஏற்பட்ட சிறிய அனுபவத்தை நாளை தொடர்கிறேன் நண்பர்களே! :)
 அன்புடன்

விஜய்










3 கருத்துகள்:

  1. நண்பர்களே....நேற்றைய சுவாரஸ்யமான சம்பவங்களை தட்டி விடுங்களேன். ஆவலோடு காத்திருக்கிறேன்/றோம்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்டாலின் ஜி, இந்த காலத்து குட்டீஸ் தமிழ் காமிக்ஸும் வாங்குவதைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி! ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்புடன் பதிவு இட்டு வருகிறீர்கள் - வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு