புதன், 7 ஆகஸ்ட், 2013

அதகள சுட்டிகள் (ஈரோடு புத்தகத் திருவிழா (4th day)-6-8-2013)

ஈரோடு புத்தகத் திருவிழா (4th day)
* நேற்றுப்போலவே, ஆனால் அதிக எண்ணிக்கையில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் கூட்டம் பகலில் நிரம்பியிருந்தது. நமது ஸ்டாலில் இலவசமாக வினியோகிக்கப்பட்ட டைம்-டேபிளிற்காக சந்தோஷ முகத்துடன் நிறைய மாணவர்கள். அவர்களில் சிலர் "டேய், இது தமிழ்ல காமிக்சுடா" என்று அவர்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டு அவசரமாக இடத்தைக் காலி செய்தனர்.
* மாணவர்களைவிட, மாணவிகளே நம் புத்தகங்களை (வாங்கவில்லையென்றாலும்) நிதானமாகத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு மாணவி நமது 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' அட்டைப்படத்தில் காலைத் தொங்கப்போட்டபடி வலையில் படுத்திருந்த ஸ்பைடரை மற்றொரு மாணவியிடம் காட்டி "ஹே! இங்க பாருப்பா, இவரெல்லாம் சூப்பர் ஹீரோவாம்!" என்று சொல்லி 'களுக்'கென்று ஒரு சிரிப்பு சிரித்தது! (ஹம்... பார்த்தவுடனே எப்படித்தான் கண்டு பிடிக்கறாங்களோ!!). அந்த மாணவர்கள் இடத்தைக் காலி செய்தபின், ஒரு புதியவர் நம் ஸ்பைடரை முதன் முதலாகப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் என் பார்வையை SHSS மீது திருப்பினேன். குழந்தை மனம் கொண்ட ஒரு பெரியவர் வலையில் படுத்தபடியே தண்ணீர் துப்பாக்கியை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருப்பது போலதான் இருந்தது! (ஸ்பைடரின் ஆவி என்னை மன்னிப்பதாக!)
* மதுரையிலிருந்து வாசகர் ஒருவர் தனது பணியாளரை அனுப்பி இரண்டு புத்தகங்களை வாங்கிவரச்சொல்லி, கூடவே ஆறு மாத சந்தா தொகையையும் கொடுத்தனுப்பியிருந்தார்.
* கரூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்தும் சில வாசக நண்பர்கள் வந்திருந்து, தங்களது காமிக்ஸ் அனுபவங்களைப் பரவசமாகப் பேசி விடைபெற்றனர். ( அது எப்படிங்க எல்லோருமே தங்களுடைய சிறுவயதிலேயே காமிக்ஸ் கலெக்ஷன் மொத்தத்தையும் பறிகொடுத்திருக்கீங்க?!!!)
* இதுவரை விற்ற இதழ்களில் சுட்டி-லக்கியும், லக்கி-ஸ்பெஷல்-1 ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. மூன்றாமிடம் நம்ம டெக்ஸின் 'நிலவொளியில் ஒரு நரபலி'!
* மூத்த ஆசிரியை ஒருவர் எதேச்சையாக நம் ஸ்டாலைப் பார்த்துவிட்டு "கடவுளே இது முத்து காமிக்ஸா?" என்று சந்தோஷக் கூச்சலிட்டபடியே ஸ்டாலுக்குள் ஓடிவந்தாராம். மகிழ்ச்சி பொங்க எல்லா இதழ்களையும் பார்வையிட்டுவிட்டு அண்ணாச்சி ராதாகிருஷ்ணனிடம் நெடுநேரம் பேசிவிட்டு, சில புத்தகங்களையும் அள்ளிச் சென்றாராம். இது அண்ணாச்சி வியப்புடன் என்னிடம் சொன்ன சேதி!

அன்புடன்
விஜய்

         இன்று காலை பணிகளுக்கு இடையே சுமார் 12.00மணிக்கு ஸ்டால் பக்கம் சென்றேன். பள்ளி பாடவேளை அட்டவனையை அண்ணாச்சி படு பிசியாக வினியோகித்துக்கொண்டிருந்தார். வேலு அவர்கள் புதியதாக கொரியரில் வந்திருந்த விளம்பர பேனரை மும்முரமாக ஒட்ட ஆரம்பித்தார் குட்டிகளின் அதகளம் இன்று அதிகம்தான் அதில் ஒரு குட்டிப்பயல் சுட்டி லக்கியை கையில் எடுத்து இது வேனும்னா எனக்கூறி எவ்வளவு என்றான் அண்ணாச்சி 45 ரூபாய் என்று சொல்ல பொசுக்கென்று கீழே வைத்து விட்டு நான் கூப்பிடுவதை காதில் வாங்காமல் ஓடிவிட்டான். இந்த குட்டிகளுக்காக வேணும்  இனி குறைந்த பக்கத்தில் குறைந்த விலையில் ஏதேனும் ஆசிரியர் செய்தால் தேவ்லை....

அன்புடன்
ம.ஸ்டாலின்
11 கருத்துகள்:

 1. முதல் நான்கு போட்டோ (வீடியோ?) எனக்கு லோட் ஆகவில்லை நண்பரே ? எனக்கு மட்டும் தான் இந்த பிரட்சினையா ?

  தகவல்களுக்கு நன்றி ...

  பதிலளிநீக்கு
 2. அட்டைவனை அண்ட் லேபில் அருமையானதொரு முயற்சி.
  இப்பொழுதே அவர்கள் மனதில் நமது ஹீரோக்களின் உருவத்தை ஏற்றிவிட்டால்.
  சிறிது நாள் கழித்து கண்டிப்பாக வாங்குவார்கள்

  விஜயின் எழுத்துக்களை வலைதளத்தில் பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
  சிறிது நாட்களுக்கு முன்பு கார்த்திக் வலை தளத்தில் இவரை ஒரு வலை பூ ஆரம்பிக்க வைக்க முயற்சி செய்தோம் ஆனால் அந்த ஆசை ஒரு வாறு நிறைவேறி விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இவரை ஒரு வலை பூ ஆரம்பிக்க வைக்க முயற்சி செய்தோம் ஆனால் அந்த ஆசை ஒரு வாறு நிறைவேறி விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.//
   அவர் தனியே ஒரு வலை வீச வேண்டும் என்பதே என் ஆசை! :)

   நீக்கு
  2. வலை(ப்பூ)யில் பூனை சிக்குமா :)

   நீக்கு
 3. //இந்த குட்டிகளுக்காக வேணும் இனி குறைந்த பக்கத்தில் குறைந்த விலையில் ஏதேனும் ஆசிரியர் செய்தால் தேவ்லை....//

  நீங்களும் பல மாதங்களாக இதனை சொல்லி வருகிறீர்கள். இது நடந்தால் விற்பனையும் பன்மடங்கு பெருகும் !

  பதிலளிநீக்கு