" ஒரு ஒத்திகை ஞாயிறு " (EBFன் மூன்றாம் நாள்)
* முதலிரண்டு நாட்கள் மாலையில் பெய்த மழையால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம்
வராத நிலையில், மூன்றாம் நாள் (ஞாயிறு) வருணபகவான் சற்றே இறக்கம் காட்ட, எல்லா
ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் லேசான தூறல் இருந்தாலும்,
வெயில் இல்லாத இதமான வெப்பநிலை சூழ்நிலையை வசந்தமாக்கிக் கொண்டிருந்தது.
பெரும்பாலான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பல பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை அழைத்துவந்திருக்க, சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அழைத்து
வந்திருந்ததையும்(!) காணமுடிந்தது!
* நண்பர்கள் புனித சாத்தான், டெக்ஸ் விஜயராகவன், யுவா கண்ணன், பழனிவேல்
ஆறுமுகம், கோவையிலிருந்து செல்வராஜ், மொய்தீன், திருப்பூரிலிருத்து சிபி, சிம்பா,
அசோக் குமார், பெருந்துறை செல்வகுமார், 'அன்புத் தம்பி' சத்யா கோபியிலிருந்து அருள்
பிரகாசம், கரூரிலிருந்து டாக்டர் சுவாமிநாதன், திருநெல்வேலியிலிருந்து கார்த்திகை
பாண்டியன் மற்றும் பெயரை நினைவுகூற இயலாத இன்னும் ஏராளமான பழைய/புதிய நண்பர்கள்
வந்திருந்தனர். அனைவரது முகத்திலும் கரைபுரண்டோடும் காமிக்ஸ்!
* நண்பர் கார்த்திகை பாண்டியனுடனான உரையாடல் உற்சாகமானதாகவும்,
உபயோகமானதாகவும் இருந்தது. 'பெளன்சர்' தொடரின் கதாசிரியர் Alexandro Jodorowskyயின்
திரைப்படங்களைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொஞ்சம் பயமுறுத்தினார். நண்பரின்
சிறுகதைத் தொகுப்பு 'மர நிற பட்டாம்பூச்சிகள்' என்ற பெயரில் இன்று
(3/8/2015)ஈரோட்டில் வெளியீட்டுவிழா காண்கிறது. வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்
அவர்களே!
* நமது ஸ்டாலில் விற்பனை சீராக நடந்துகொண்டிருக்க, பலதரப்பட்ட மக்களும்
ஆர்வமாய் நமது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து வாங்கிச் சென்றனர். பல பெற்றோர்கள்
பதின்பருவத்தை எட்டிப்பிடிக்கக் காத்திருந்த தங்களது பிள்ளைகளுக்கு தங்களது சொந்த
விருப்பத்தின்பேரிலோ அல்லது தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தின்பேரிலோ ஒன்றிரண்டு
புத்தகங்களை பில் போட்டனர். அவர்களின் தேர்வு பெரும்பாலும் லக்கிலூக் அல்லது
ஊதாகோட்ஸ் ( ப்ளூ = ஊதா என்று எடிட்டர் சொல்லியிருக்காரில்ல?) ;)
* இன்றைய man of the day யாரென்று கேட்டால் யோசிக்காமல் "சிபி" என்று
சொல்லிவிடலாம்! தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடும் பொருட்டு மதியம் ஆஜரானவர்
இரவுவரை உற்சாகமாத்தின் உறைவிடமாய் இருந்ததோடு, சுவையான மதிய விருந்தளித்து
நண்பர்களின் வயிற்றிலிருக்கும் கிரைண்டர்களுக்கு ஏக வேலை கொடுத்தார். வழக்கம்போல
அதே மரத்தடியில் ஸ்டாலின் வாங்கிவந்த ஒரு அழகிய கேக் பிறந்தநாள் பேபியால்
கூறுபோடப்பட்டு, அவரது கைகளாலேயே நண்பர்களின் வாய்க்குள்ளும் திணிக்கப்பட்டது (
கிரைண்டர் லோடு தாளாமல் திணறியது).
* நாங்கள் ஸ்டாலில் இல்லாத நேரத்தில் 55+ வயதுடைய பெண்மணி ஒருவர் மிகுந்த
ஆர்வத்துடன் நமது புத்தங்களைத் தேர்வுசெய்து ₹3000+ க்கு வாங்கிச் சென்றதாக
'பிரின்டர்' குமார் தெரிவித்தார்! ( மறுபடியும் அந்தப் பாட்டிம்மாவைப் பார்க்க
முடிந்தால் ஒரு வீடியோ பேட்டியைத் தயார் செய்துவிடலாம். போராட்டக் குழுவின்
மகளிரணித் தலைவி பதவியைக் கொடுத்து கெளரவிக்கவும் ஆசை!). தலீவியே, நீங்க எங்க
இருக்கீங்க?
* 40+ வயதுள்ளவர்களின் புத்தகத் தேர்வுகளில் டெக்ஸ் புத்தகங்களோடு மாயாவி,
ஸ்பைடர், லாரன்ஸ்-டேவிட் மறுபதிப்புகள் கட்டாயமாக இடம்பிடித்திருந்தது.
* பில் போட்டவர்களில் 10ல் ஒருவராவது 'The lion-250'யை தேர்வு செய்திருந்தனர்.
30ல் ஒருவர் 'மின்னும் மரணம்'! ( தோராயமான கணிப்பு மட்டுமே)
* டெக்ஸ் டைட்டில் அதிகமில்லாதது பலருக்கும் ஏமாற்றமே! இதனால், விற்பனையில்
ஒரு கணிசமான இழப்பை சந்திக்கநேரிடும் என்பதும் உண்மை!
* ஒவ்வொரு வருடமும் நாம் சந்திக்கும் மிக முக்கியமான விசாரிப்புகளில் ஒன்று "
இரத்தப்படலம் தொகுப்புக் கிடைக்குமா?". இப்படிக் கேட்பவர்களிடமெல்லாம் நாம்
சொல்லும் பதில் : "கொஞ்சநாள் பொறுங்க சார்... கலர்லயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கு"
(ந..நான் சொல்றது சரிதானே எடிட்டர் சார்?)
* நம்மிடம் பேச்சுக்கொடுத்தவர்கள் அனைவரிடமும் எடிட்டரின் வருகையைப் பற்றிய
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The CCC, எடிட்டர், ஏராளமான நண்பர்களுடன்
ஏகத்துக்கும் களைகட்டப்போகும் அடுத்த ஞாயிறுக்கு இதுவொரு 'ஒத்திகை ஞாயிறு' (
அப்பாடா! டைட்டிலைக் கொண்டுவந்துட்டேன்) என்றால் அது மிகையாகிடாது!
அன்புடன்
ஈரோடு விஜய்
|