செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

சிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்


வணக்கம் நண்பர்களே

2-8-2015 ஞாயிறு என்பதனால் நண்பர்களின் வருகை அதிகம் என்ற போதிலும் ஆசிரியரின் அட்டனன்ஸ் இல்லாததால் நட்புகளின் கூட்டம் குறைவே. 

நண்பர் 17 ஆம் சித்தர் சிபிஜியின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடினோம். ஞாயிறு என்பதால் விற்பனையும் சூடு பிடித்திருந்தது... நண்பர்களுடன் இரவுவரை பொழுது போனதே தெரியவில்லை
அடுத்த சனி ஞாயிறு ஆசிரியர் விஜயன் அவர்களின் வருகை என்பதனால் இன்னும் அதிகமான் நண்பர்களை எதிர்பார்க்கிறோம்...

அன்புடன்
ம. ஸ்டாலின்

 

"  ஒரு ஒத்திகை ஞாயிறு  " (EBFன் மூன்றாம் நாள்)


* முதலிரண்டு நாட்கள் மாலையில் பெய்த மழையால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராத நிலையில், மூன்றாம் நாள் (ஞாயிறு) வருணபகவான் சற்றே இறக்கம் காட்ட, எல்லா ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் லேசான தூறல் இருந்தாலும், வெயில் இல்லாத இதமான வெப்பநிலை சூழ்நிலையை வசந்தமாக்கிக் கொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துவந்திருக்க, சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அழைத்து வந்திருந்ததையும்(!) காணமுடிந்தது!

* நண்பர்கள் புனித சாத்தான், டெக்ஸ் விஜயராகவன், யுவா கண்ணன், பழனிவேல் ஆறுமுகம், கோவையிலிருந்து செல்வராஜ், மொய்தீன், திருப்பூரிலிருத்து சிபி, சிம்பா, அசோக் குமார், பெருந்துறை செல்வகுமார், 'அன்புத் தம்பி' சத்யா கோபியிலிருந்து அருள் பிரகாசம், கரூரிலிருந்து டாக்டர் சுவாமிநாதன்,  திருநெல்வேலியிலிருந்து கார்த்திகை பாண்டியன் மற்றும் பெயரை நினைவுகூற இயலாத இன்னும் ஏராளமான பழைய/புதிய நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரது முகத்திலும் கரைபுரண்டோடும் காமிக்ஸ்!

* நண்பர் கார்த்திகை பாண்டியனுடனான உரையாடல் உற்சாகமானதாகவும், உபயோகமானதாகவும் இருந்தது. 'பெளன்சர்' தொடரின் கதாசிரியர் Alexandro Jodorowskyயின் திரைப்படங்களைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொஞ்சம் பயமுறுத்தினார். நண்பரின் சிறுகதைத் தொகுப்பு 'மர நிற பட்டாம்பூச்சிகள்' என்ற பெயரில் இன்று (3/8/2015)ஈரோட்டில் வெளியீட்டுவிழா காண்கிறது. வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன் அவர்களே!

* நமது ஸ்டாலில் விற்பனை சீராக நடந்துகொண்டிருக்க, பலதரப்பட்ட மக்களும் ஆர்வமாய் நமது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து வாங்கிச் சென்றனர். பல பெற்றோர்கள்  பதின்பருவத்தை எட்டிப்பிடிக்கக் காத்திருந்த தங்களது பிள்ளைகளுக்கு தங்களது சொந்த விருப்பத்தின்பேரிலோ அல்லது தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தின்பேரிலோ ஒன்றிரண்டு புத்தகங்களை பில் போட்டனர். அவர்களின் தேர்வு பெரும்பாலும் லக்கிலூக் அல்லது ஊதாகோட்ஸ் ( ப்ளூ = ஊதா என்று எடிட்டர் சொல்லியிருக்காரில்ல?) ;)

* இன்றைய man of the day யாரென்று கேட்டால் யோசிக்காமல் "சிபி" என்று சொல்லிவிடலாம்! தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடும் பொருட்டு மதியம் ஆஜரானவர் இரவுவரை உற்சாகமாத்தின் உறைவிடமாய் இருந்ததோடு,  சுவையான மதிய விருந்தளித்து  நண்பர்களின் வயிற்றிலிருக்கும் கிரைண்டர்களுக்கு ஏக வேலை கொடுத்தார். வழக்கம்போல அதே மரத்தடியில் ஸ்டாலின் வாங்கிவந்த ஒரு அழகிய கேக்  பிறந்தநாள் பேபியால் கூறுபோடப்பட்டு, அவரது கைகளாலேயே நண்பர்களின் வாய்க்குள்ளும் திணிக்கப்பட்டது ( கிரைண்டர் லோடு தாளாமல் திணறியது).

* நாங்கள் ஸ்டாலில் இல்லாத நேரத்தில் 55+ வயதுடைய பெண்மணி ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் நமது புத்தங்களைத் தேர்வுசெய்து ₹3000+ க்கு வாங்கிச் சென்றதாக 'பிரின்டர்' குமார் தெரிவித்தார்! ( மறுபடியும் அந்தப் பாட்டிம்மாவைப் பார்க்க முடிந்தால் ஒரு வீடியோ பேட்டியைத் தயார் செய்துவிடலாம். போராட்டக் குழுவின் மகளிரணித் தலைவி பதவியைக் கொடுத்து கெளரவிக்கவும் ஆசை!). தலீவியே, நீங்க எங்க இருக்கீங்க?

* 40+ வயதுள்ளவர்களின் புத்தகத் தேர்வுகளில் டெக்ஸ் புத்தகங்களோடு மாயாவி, ஸ்பைடர், லாரன்ஸ்-டேவிட் மறுபதிப்புகள் கட்டாயமாக இடம்பிடித்திருந்தது. 

* பில் போட்டவர்களில் 10ல் ஒருவராவது 'The lion-250'யை தேர்வு செய்திருந்தனர். 30ல் ஒருவர் 'மின்னும் மரணம்'! ( தோராயமான கணிப்பு மட்டுமே)

* டெக்ஸ் டைட்டில் அதிகமில்லாதது பலருக்கும் ஏமாற்றமே! இதனால், விற்பனையில் ஒரு கணிசமான இழப்பை சந்திக்கநேரிடும் என்பதும் உண்மை! 

* ஒவ்வொரு வருடமும் நாம் சந்திக்கும் மிக முக்கியமான விசாரிப்புகளில் ஒன்று " இரத்தப்படலம் தொகுப்புக் கிடைக்குமா?".  இப்படிக் கேட்பவர்களிடமெல்லாம் நாம் சொல்லும் பதில் : "கொஞ்சநாள் பொறுங்க சார்... கலர்லயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கு" (ந..நான் சொல்றது சரிதானே எடிட்டர் சார்?)

* நம்மிடம் பேச்சுக்கொடுத்தவர்கள்   அனைவரிடமும் எடிட்டரின் வருகையைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The CCC, எடிட்டர், ஏராளமான நண்பர்களுடன் ஏகத்துக்கும் களைகட்டப்போகும் அடுத்த ஞாயிறுக்கு இதுவொரு 'ஒத்திகை ஞாயிறு' (  அப்பாடா! டைட்டிலைக் கொண்டுவந்துட்டேன்)  என்றால் அது மிகையாகிடாது!
 
அன்புடன்

ஈரோடு விஜய்

 
        ஈரோடு விஜய் , பாரதி நந்தீஸ்வரன்,ஸ்டாலின், சோமசுந்தரம் (எ) புனித சாத்தான், சிபிஜி








ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

குதுகல ஆரம்பம்....

நண்பர்களே
வணக்கம்.
31-7-2015 முதல்   துவங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா!

மலேசியாவிலிருந்து வருகைபுரியும், சார்க் கூட்டமைப்பின் சிறப்புத் தூதர் திரு. டத்தோ சாமிவேலு அவர்கள் மாலை 6 மணிக்கு புத்தகக் திருவிழாவைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். 

இரண்டுமுறை EBFல் சிறப்புரையாற்றி தன் எளிமையாலும், அன்பாலும் ஈரோடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாமனிதர் APJ.அப்துல்கலாம் அவர்களின் மறைவினால் ஈரோடு நகரமே தங்கள் உறவினரை இழந்ததைப் போல் சோகத்தில்  மூழ்கிக்கிடக்கிறது. எனவே இம்முறை இந்தப் புத்தகத் திருவிழா அவருக்கு மெளன அஞ்சலி செலுத்திடும் விதமாகவே இயங்கிடும் என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

 

இப்படியொரு சூழலில், சென்ற வருடத்தைப்போல( LMS வெயீடு) கொண்டாட்டமானதொரு நிகழ்வு இம்முறை இல்லாமல்போனதும்கூட ஒருவகையில் நன்மைக்கே என்று நினைக்கத் தோன்றுகிறது! ஏனெனில், உற்சாகக் கூக்குரல்களும், கரவொலிகளும்கூட இப்போதைய இறுக்கமான சூழ்நிலைக்கு சற்றே அந்நியமாகிவிடும் வாய்ப்பிருப்பதே காரணம்!

அதற்காக, சோகத்தை மட்டும் மனதில் தாங்கி மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லைதானே?....  காமிக்ஸ்  புத்தகங்கள் - காமிக்ஸ் சார்ந்த இடம்  - காமிக்ஸ் நண்பர்கள் -  காமிக்ஸ் தொடர்பான உரையாடல்கள் - இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டுமே இருந்தால் கூட அது  இழந்த உற்சாகத்தை மீட்டெடுக்க வல்லது எனும்போது, இவை அனைத்தும் ஒன்றுகூடி சங்கமிக்கப்போகும் ஒரு இடத்தில் நீங்களும் ஒருவராக ஏன் பங்குகொள்ளக்கூடாது? 

இயன்றவர்கள் வாருங்கள் நண்பர்களே! இன்முகத்தோடு காத்திருப்போம்...! 

*  மாலையில் பெய்த மிதமான மழையினாலும், சென்ற வருட துவக்க விழாவில் கலந்துகொண்டு ஈரோட்டையே அதிர வைத்த இசைஞானி இளையராஜாவைப் போல ஒரு கவர்ந்திழுக்கும் personality  இம்முறை இல்லாததினாலும் அரங்கங்கள் சற்று (அதிகமாகவே) வெறிச்சோடிக் கிடந்தது நிஜ௬ம்! பொதுவாகவே EBF அதன் துவக்க நாளன்று மிதமான கூட்டத்தை அரங்கத்தினுள்ளும்,  எக்கச்சக்க கூட்டத்தை கருத்தரங்கம் நடைபெறும் திறந்தவெளியிலும் கொண்டிருக்கும்.  இம்முறை வெளியே இருந்ததே பாதியளவு கூட்டம்தான் என்றால், உள்ளேயோ ஒருசிலர் மட்டுமே! நம் ஸ்டாலும் விதிவிலக்கல்ல!

* மழையால் சற்று தாமதமாகி சுமார் 7 மணிக்கு நான் சென்றபோது, நமது ஸ்டாலில் 'பிரின்டிங்' குமாரும், 'மார்கெட்டிங்' கணேசன் அவர்களும் சிரித்த முகத்தோடு வரவேற்றனர். சென்றமுறை தன் ஏனோதானோ நடவடிக்கைகளால் என்னை ஏகத்துக்கும் டென்ஷனாக்கிய 'சின்னப் பையன்' செல்வம் கண்ணில் படாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது! 

* பள்ளி ஆசிரியர் ஒருவர் 'The lion-250'யை ஏற்கனவே வாங்கி வைத்திருப்பதாகவும், மூன்று கதைகளிலுமே ஓவியங்கள் சரியில்லை என்பதால்(!) கதையைப் படிக்காமல் வைத்திருப்பதாகவும்,நல்ல ஓவியங்கள் இருக்கும்படியான டெக்ஸ் கதைகளையே இனித் தேர்வு செய்யச்சொல்லி நீங்கள் எடிட்டரிடம் வற்புறுத்தவேண்டும்(!) என்றும் என்னிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்! இப்படியொரு புகாரை சற்றும் எதிர்பார்க்காத நான், பிறகு ஒருவழியாகச் சுதாரித்துக்கொண்டு "கதை சூப்பரா இருக்குங்க சார். நீங்க கதையைப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா அப்புறம் இந்தக் குறை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை"என்றேன். 
"அட, ஓவியங்களே சரியில்லைன்றேன்... அப்புறம் கதையை எப்படி படிக்கிறதாம்? தீபாவளிக்கு வரப்போற ஒரு கதைக்கு மட்டும் 'அசாத்திய சித்திரங்களுடன்'னு விளம்பரம் போட்டிருக்காரில்ல? இதுக்கு மட்டும் ஏன் சாதாரணச் சித்திரங்கள்னு கேட்கிறேன்? பதில் சொல்லுங்க" 
"ம்.... எடிட்டர் அடுத்த வாரம் இங்கே வரார். நீங்களே நேர்ல வந்து கேட்டுடுங்களேன்?"
நான் கேட்டுக்கொண்டதற்கும், விடைபெற்றுச் செல்வதற்கும் பொதுவாக ஒரு "வரேன்"ஐ  சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்! 

புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதென்பது அப்படியொன்றும் சுளுவான வேலையில்லை நண்பர்களே! :D

* பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டு ஸ்லோமோஷனில் திரும்பினேன். 'அட! நம்ம ஸ்டாலின்!' . சமீபத்திய உடல்நலக்குறைவிலிருந்து நன்றாகவே மீண்டிருப்பதை அவர் தோற்றமே உறுதிப்படுத்தியது! லக்கிலூக்கின் தீவிர ரசிகனான தன் மகனுடன் வந்திருந்திருந்தார்.

* சென்னை சில்க்ஸின் M.D திரு. விநாயகம் அவர்கள் நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்திருந்தது இன்றைய சிறப்பு நிகழ்வுகளில் (ஒன்றே) ஒன்றாகும்! தொழில்ரீதியாக அவரை நன்கு  தெரிந்துவைத்திருந்த நண்பர் ஸ்டாலின், அவருக்குத் தடபுடல் வரவேற்புக் கொடுத்ததோடு என்னை அறிமுகமும் செய்துவைத்தார். லக்கிலூக் உள்ளிட்ட சில புத்தகங்களைத் தன் மகளுக்காகத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு கிளம்பிய அவர் ஒரு  இரும்புக்கை மாயாவி ரசிகர் என்பதைப் பிறகு ஸ்டாலின் சொல்லித் தெரிந்துகொண்டேன். 
  திரு இராஜ கணபதி--- சென்னை சில்க்ஸ் இயக்குனர் திரு K.விநாயகம் ---மற்றும் ம.ஸ்டாலின்

 மக்கள் சிந்தனை அரங்கம்

* நமது ஸ்டால் நிறையவே புத்தகங்களுடன் நிறைவாகக் காட்சியளித்தது. 'The CCC'யின் 'விரைவில் வருகிறது' ஆளுயரப் பேனர் stallன் பிரதானச் சுவரை அலங்கரித்தது. இந்தமாதம் வரயிருக்கும் 'எத்தனுக்கு எத்தன்', 'உறைபனி மர்மம்' ஆகியவற்றின் போஸ்டர்கள் பக்கவாட்டு சுவர்களில் பயமுறுத்தின!

*  மாயாவி & ஸ்பைடரின் புக்மார்க்ஸ், 'புரட்சித்தீ'யின் ஒருபக்கத்தை ட்ரெய்லராகக் கொண்ட நோட்டீஸ், நமது genreகளை அறிமுகப்படுத்தும் நான்கு பக்க pamphlet , விசிட்டிங் கார்ட்ஸ் என்று விதவிதமாய் மெனக்கெட்டிருப்பது திருப்தியளிக்கிறது.

* இந்தமாதத்தில் வெளிவரவேண்டிய புத்தகங்களில் ஒன்றுமட்டும் (ஊதாப் பொடியர்கள்? ) இன்னும் பிரின்ட் செய்யாமல் இருக்கிறார்களாம்.  கூட்டிக்கழித்துப் பார்த்தால் 'The CCC' வெள்ளிக்கிழமை கூரியரில் அனுப்பப்பட்டு, சனிக்கிழமையன்று ஈரோட்டில் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக அனுமானிக்க முடிகிறது!
 
 நாளை ஞாயிற்று கிழமை என்பதனால் நண்பர்களை அதிகம் எதிர் பார்ககிறோம்

நட்புடன்
ஈரோடு விஜய்
 
 
 நண்பர்கள் அனைவரையும் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வருக வருக என வரவேற்கிறோம்


நட்புடன்
ம.ஸ்டாலின்