ஞாயிறு, 24 ஜூன், 2012

நைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)


சுஜாதாவின் "நைலான் கயிறு"


பெயர் : நைலான் கயிறு
ஆசிரியர் : சுஜாதா
ஒவியர் : ஜெயராஜ்
பதிபகம் : தெரியவில்லை
பதிப்பு : இருவண்ணம்

அட்டைபடம் : இல்லை (வழக்கம் போல்)





"சுஜாதா"  இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு கட்டுப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரியது.

கணிப்பொறியியல், இலக்கியம், தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று மனிதர்  தொடாத துறைகளே இல்லை . காமிக்ஸயும் இவர் கதை பதம்பார்துள்ளது நமக்கு ஒரு மிகப்பெரிய வரம். 


சென்ற ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்ச்சியின் பொழுது சுஜாதாவின் பழய புத்தகங்களின் மீதி இருந்த சிலவற்றை 10 புத்தகம் 112 ரூபாய்க்கு வாங்கினேன். அனைத்தும் 80களில் அவர் எழுதிய பொதினங்கள். 

 எனது பொக்கிஷப்பெட்டியை அழகு படுத்தும் நைலான் கயிறு இப்போது
BPK, நிஜாம் மற்றம் பல நண்பர்களுக்காகவும்.... 




 கணேஷ் -வசந்த்

ஆரம்ப காலத்தில் டில்லியில் வசித்து வந்ததாக கணேஷை சித்தரித்து அதனை மையமாக வைத்து   உருவாக்கியது இந்த கதை. முதலில் கணேஷை மட்டும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில் வசந்த் கிடையாது . பின்னர் வந்த கதைகளில் கணேஷ் - வசந்த் இணைந்து பல ஹிட் கொடுத்ததால் மறுஅவதாரமாக வந்த இந்த சித்திர கதைக்காக வசந்தை இணைத்திருக்கலாம். அனேகமாக கணேஷ் - வசந்த் இருவரும் வந்த "நைலான் கையிறு " கதை இதுவாகத்தான் இருக்கும் .



கதைச்சுருக்கம்:

அனைவரும் படித்திருக்கும் கதைதான் என்றபோதிலும் மறுபடியும்.....

நைலான் கையிறு மூலம் கொலை செய்யப்படும் கிருஷ்ணன் , அதற்கு தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கை சந்திக்கும் தேவ்தத்தன் மற்றும் ஹரிணி, இவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிதரும் கணேஷ் . இப்படி போகும் கதை இதன் பிறகு தான் சூடுபிடிக்கிறது





,உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க கணேஷ் - வசந்த் எடுக்கும் முயற்சிகள் ஒரு சிறு நூலிலையை பிடித்து முன்னேறுகிறது

 இறுதியில் கொலை செய்யப்பட்டதற்கு கூறப்படும் நியாயமான காரணம் ( இன்றய பல கதைகளுக்கு இதுதான் முன்னோடி), 

கதையின் மிக முக்கிய பலம் ; ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் கதையின் மூலக்கருவை ஒரேடியாக சொல்லி போரடிக்காமல் டைரி மூலமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லுவது சுஜாதாவிற்கே உள்ள டச்... (இதுதான் பின்னர் கமலின் ஆளவந்தான் படத்தில் பிரதிபளித்தது )

ஓவியம்: ஜெயராஜின் அற்புத தூரிகை கதையை மேலும் பிரகாசிக்க செய்கின்றது . பொதுவாக  பெண்களின் ஓவியத்தில் ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனாடமி விசயத்தில் பின்னுவார். இதற்காகவே பலர் அடிமையாகிவிடுவார்கள்
 இந்த கதையில் நீதி மன்ற காட்சிகளயும் , சில கிளுப்பான இடங்களிலும் , வழக்கம் போல தனது முத்திரையை பதித்து விட்டார் ஜெயராஜ் 


சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கும்முன் ஒரு கொசுறு செய்தி : ஓவிய மன்னன் ஜெயராஜ் எனது சிறுகதை ஒன்றுக்கு ஓவியம் வரைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? 83 ல் வந்த அந்த புத்தகம் எனது பொக்கிஷத்தில் எங்கோ புதைந்துள்ளது.

அப்புறம் இன்னும் ஓட்டு போடாத நண்பர்கள் மேலே ஒரு பதம் பார்த்தால் நல்லது ........


வியாழன், 7 ஜூன், 2012

யார் இந்த மாயாவி? (பொக்கிஷம் -3)


கனவான்களே ! சீமாட்டிகளே !!
இந்த பதிவை  படித்து உங்கள் கண்கள் சோர்ந்து போவதற்குள் அருகில் உள்ள வாக்கு பெட்டியில் உங்கள் பொன்னான வாக்கை ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு தொடர்ந்தால் எனது விரல்கள்  பெற்ற வீக்கங்களுக்கு  ஒத்தடம் கொடுத்ததாக இருக்கும் 




எனது பால்ய பருவத்தில் மூன்றாம் வகுப்பு படித்த பொழுது முதன் முதலாக பொம்மை பார்த்த புத்தகம் " கொள்ளைகார பிசாசு ".  இது வண்ணத்தில் வந்தது . இதில் வரும் பெரிஸ்கோப் மாடல் பைப் இன்னும் எனது மனதில் பசுமையாக உள்ளது (இந்த புத்தகம் யாரிடமாவது உள்ளதா ?). இதன் கதையை எனது குட்டி நண்பர்களுடன்  எனது தாயாரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் . எனது காமிக்ஸ் பயணம் இங்குதான் ஆரம்பம் ஆனது .  இங்கு வந்துள்ள பதிவு கதை நான் படித்த மாயாவின் இரண்டாவது 96 பக்க வண்ண கதை 


 சட்டைக்கும் எனக்கும் என்ன ராசியோ தெரியவில்லை இதுவும் ஒரு சட்டை இல்லா புத்தகம் தான் . இந்த காமிக்ஸ் எனது கைக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை . ஆனால் காசு கொடுத்து வாங்காமல் யாரிடமோ சுட்டது என்பது மட்டும் உண்மை. சிறுவயதில் இதனை பலமுறை படித்து படித்து பாட புத்தகம் போல மனப்பாடமே செய்து விட்டேன் . பாட புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படித்தால் எனது தந்தைக்கு பிடிக்காது ( நான் வாங்கும் மதிப்பெண்களின் லட்சணம் அப்படி ) . பலமுறை திருட்டு தனமாக பாடபுத்தகத்தின் உள்ளே வைத்து படிப்பேன் ஆனால் எனது தாயார் எப்படியோ கண்டுபிடித்து விடுவார் . அவர் மாயாவின் படு தீவிர விசிறி ( இன்றும் கூட .  ஆனால் எழுத்துக்கள் மிக மிக சிறியதாக வருவதால் அவர்களால் படிக்க முடிவதில்லை ) .

மிக பெரிய ஜனரஞ்சக வார இதழ்கள் கூட வண்ணத்தில் வராத சமயத்தில் வெளிவந்த இந்த புத்தகம் மற்றும்  இதன் வண்ணம் என்னை வெகுவாக கவர்ந்தது

முத்து காமிக்ஸ்இன்  100  வது வெளியிடு என்பதால் முழு வண்ணத்தில் வந்த இதழ் . இப்பொழுது உள்ளது போல ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையே எந்த இணைப்பும் இல்லாததால் ஆசிரியர் கடிதம் கூட இல்லை . " தொடர்ந்து பேராதரவு காட்டிவரும் விற்பனையாளர்களுக்கும் வாசக அன்பகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி " என்ற ஒரு மூன்று வரிகளுடன் ஆரம்பிக்கிறது முதல் பக்கம் (  திரு .விஜயன் அவர்களாக இருந்திருந்தால் வெளுத்து வாங்கிஇருப்பார்  ) .
 
 //ஆங்கிலதில் வெளிவந்த இதன் பதிப்பயும் நடு நடுவே இணைத்துள்ளேன்.//

இதழின் பெயர் : "யார் இந்த மாயாவி  "
வெளியீடு          :  முத்து காமிக்ஸ்
வெளியீடு எண் : 100
வெளியான வருடம் : 1/sep/1979

இணைப்புகள் :
இந்த இதழுடன் " கலிவரின் யாத்திரைகள் " என்ற இலவச இணைப்பு வந்துள்ளது ( என்னிடம் இல்லை )
மேலும் இந்த கதையின் பின்பகுதியில்
"நிலவு பயணம் " ராக்கெட் பற்றிய விஞ்ஞான  தொடர் வந்துள்ளது.

கதை சுருக்கம் : மாயாவின் ஆரம்ப கால இரண்டாவது அல்லது மூன்றாவது கதையாக இருக்கலாம் . புரபசர் பாரிங்கர் அரவணைப்பில் மாயாவி திருந்தி நல்லவராக வாழவிரும்புகிறார் . வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் வில்லனாக வருகிறார்  டாக்டர் டியூட்ஸ்.
மாயாவி போலவே தானும் மாய உருவம் பெற வேண்டும் என்ற ஆராச்சியில் இறங்கும் டாக்டர் டியூட்ஸ் தனது முயற்சியில்  ஏற்படும் தவறுதலால் விலங்கு மனிதனாக மாறுகிறார் .  இந்த மாற்றத்தை பயன்படுத்தி பல கொள்ளைகளை நடத்துகிறார் . மாயாவி போல தோற்றம் அளிக்க தனது கையில் அலுமினிய வண்ணத்தை பூசி கொண்டு தான் செய்யும் தவறுகளுக்கு மாயாவியை பப்..பரப்ப... பலியாடாக மாட்ட வைக்கிறார் . அந்த கால ஆங்கில படத்தையும் மிஞ்சும் வகையில் கதை படு ஸ்பீடாக நகருகிறது .


பல இடங்களில் நெஞ்சை படபடக்க வைக்கும் கதை நகர்வு மயிர் கணுக்களை குத்திட்டு நிற்க வைக்கிறது .
உதாரணமாக : மாயவியை காவலர்கள் துரத்தும் காட்சி, விலங்கு மனிதனான டாக்டர் டியூட்ஸ் மாயவி மோதிக்கொள்ளும் பல இடங்கள் , பாதாள சாக்கடையில் மாயாவி மாட்டிக்கொண்டு உயிருக்கு தவிக்கும் நேரம் , இரயில் பாதையில் மாட்டும் இடம் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ./




போலீசுக்கு பயந்து தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாய் விலங்கு மனிதனுக்கு பயந்து சாதாரண மனித உருவத்தில் உள்ள நேரத்தில் டாக்டர் டியூட்ஸ் வீட்டில் மாயாவி தஞ்சம் புகுந்து மாட்டிக்கொள்ளும் இடம் படு அமர்களம்.
புரபசர் பாரிங்கர் அவரது மருமகள் லூசி ஆகியோரின் பக்க பலத்துடன் எப்படி  மாயாவி வெற்றியடைகிறார் என்பதுதான் மீத கதை

கதையின் + பாயிண்ட்: முழு வண்ணம் என்பதால் கண்களுக்கு நல்ல விருந்து.  படு வேகமாக நகரும் கதை , மாயவிக்கு உதவும் லூஸி,புரபசர் பாரிங்கர்  கதாபாத்திரம் , விஞ்ஞனதால் முடியாதது எதுவும் இல்லை என்ற நிரூபணம் , நிறைய உள்ளன..

மீண்டும் அடுத்த பதிவாக தமிழ் எழுத்துலகின் அறிவியல் நாயகன் சுஜாதா எழுதி காமிக்ஸாக வெளிவந்த "நைலான் கயிறு" கதையுடன் சந்திப்போம் . அதுவரை ஒரு காமிக்ஸ்  டூர் போயிட்டு வரலாம்....


பிற்சேர்க்கை:

இன்று (11/06/2012) நண்பர் Muthu Fan, RT முருகன் உதவிஉடன் அனுப்பிய கலிவரின் யாத்திரைகள் இதழை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். மிக்க நன்றி நண்பர்களே!