திங்கள், 7 மே, 2012

பொக்கிஷம்-2

தமிழ் காமிக்ஸ் உலகின் பழைய பொற்காலங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்க்க ஆசை பட்டாலும் இந்த தமிழ் தட்டச்சு குதிரையை பார்த்தலே, கறுப்பு கிழவி முகத்தை விட படு அஷ்ட கோணலாக எனது முகம் மாறுவதை உணரமுடிகிறது . இதில்வேறு பலமுறை back space பட்டனை அழுத்தி அழுத்தி சுண்டுவிரல் கோவித்துக்கொண்டு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது . முடிந்தவரை சண்டி குதிரையை இழுத்து பார்பதாக தீர்மானித்து விட்டேன் 

இருளின் விலை இரண்டுகோடி

இதழின் பெயர் : "இருளின் விலை இரண்டுகோடி "
வெளியீடு :  முத்து காமிக்ஸ்
வெளியீடு எண்:  தெரியவில்லை


மூன்று கோடி மக்கள் வாழக்கூடிய ஒரு மிகப்பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரம் மின் தட்டுபாடு ஏற்பட்டால் நிலமை தலைகீழாக   மாறிவிடும் என்பதற்கு எடுத்துகாட்டாக வெளிவந்த மாண்ட்ரேக்கின் கதை இது . 

பல நாட்களாக இரவில் வெளிச்சத்தை பார்காத இருண்ட கண்டமான நம்ம ஊரை ஒப்பிட்டு இந்தக்கதையை படித்தால் நாமெல்லாம் எவ்வளவு அடித்தாலும் தங்குகிற ஜாதி என்பது அணைத்து தரப்பினரும் ஒப்புகொள்ள கூடிய ஒன்று

 
1980 கு முன்பு வெளிவந்த முத்து காமிக்ஸின் இருவண்ண கதை . தரமான தெளிவான கதை அமைப்பு.  80  களில்  தெரு தெருவாய் பழைய காமிக்ஸ்  புத்தகங்களை தேடி திறிந்த பொழுது  ( அந்த சுகமே தனிதான் ) கைகளில் அகப்பட்ட  மற்றும் ஒரு சட்டை இல்லாத பொக்கிஷம் .  40 பைசா விற்கு பழைய புத்தக கடையில் வாங்கியது இன்னும் நினைவில்  உள்ளது .  
பதிவுக்காக எனது தாத்தா கொடுத்த இன்னும் துரு ஏறாத  தகர பெட்டியை உருட்டியபோது  சிக்கிய எனது சொத்துகளில்  மூன்றாவது பட்டியல் ( முதல் பட்டியலில் உள்ள இதழ் குறித்த பதிவு இவருட இறுதியில் வெளிவரும் ). 

கதை சுருக்கம் : அதீத அறிவியல் ஆற்றல் கொண்ட Dr  ஜெட்  தனது அற்புத கண்டுபிடிப்பின் மூலம் குறுக்கு வழியில் பணம் தேட நினைக்கிறான் . அதனை அரசாங்கத்திற்கு உணர்த்த எட்டு மாகாணங்களில் மின்வெட்டு ஏற்படுத்த நினைகின்றான் . அதற்கு தனது அறிவியல் கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாட்டில்  உற்பத்தியான மின்சாரத்தை  திருடுகிறான் ( தமிழ்நாட்டில் இப்படி எந்த புண்ணியவானும் இல்லையா?)



தனக்கு சொந்தமான கோட் தீவில் இருந்து கொண்டு நகரத்தில் இவன் ஏற்படுத்தும் இந்த மின்திருட்டு விருவிருக்க   வைக்கின்றது .     இரண்டு மணி நேரம் நீடிக்கும் இந்த மின்வெட்டால் ஏற்படும் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு தனது சகா "டட்லி"   மற்றும் அவன் சகநண்பன்  "புரூச் "   உதவியுடன்  பல வங்கி கொள்ளை , வழிப்பறி , திருட்டு ஏற்படுத்துகிறான்.  இந்த கொள்ளையில் தன்பங்காக இரண்டு கோடி டாலர் பெற்று கொள்கிறான்  Dr  ஜெட் .

இது இப்படி இருக்க . உற்பத்தியான மின்சாரம் எப்படி மாயமாக மறைந்தது என்று தெரியாமல் குழம்பும் நகர மேயர் நமது ஹீரோ மாண்ட்ரேக் & கோ  உதவியை நாடுகிறார்கள் .
Dr  ஜெட்  வேண்டும் என்றே விட்டு சென்ற தடங்களை பின்பற்றி கோட் தீவை அடைகிறது நமது கூட்டணி . அங்கு ஏற்பட்டும் அறிவியல் அனுபவங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது . இருந்த போதிலும் தீய எண்ணம் கொண்ட  Dr  ஜெட் ஐ நமது ஹீரோ எப்படி பணிய வைக்கிறார் என்பது மீத கதை .
 
கதையின் + பாயிண்ட் : நல்ல எழுத்துநடை , தெளிவான பதிப்பு ,  சோடைபோகாத வண்ண பதிப்பு , மாண்ட்ரேக்கின் மதினுட்ப தந்திரம் , Dr  ஜெட் இன்  100  மில்லியன் டிகிரி வெப்பத்தை ஏற்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்பு என சொல்லி கொண்டே போகலாம் .

பேய் நகரம்  :

 



இந்த இதழில் கொசுறு கதையாக மாண்ட்ரேக்கின் " பேய் நகரம் " இடம் பெற்றுள்ளது .  குட்டி கதையாக இருந்தாலும் தலைவருக்கே (மாண்ட்ரேக்) தண்ணி காட்டும் வில்லன்களின் தந்திரம் அமர்க்களம் . 

 நண்பர்கள் யாரேனும் இந்த பழைய பொக்கிஷம் வைத்திருப்பின் இதன் அட்டைபடம் மற்றும் கிழிந்தஇரண்டு  பக்கங்களை ஒரு நகல் அனுப்பினால் உதவியாக இருக்கும் 

மீண்டும் அடுத்த பதிவாக முத்து காமிக்ஸின் 100  இதழான ஒரு முழுவண்ண கதையுடன் சந்திக்கலாம் அதுவரை கனவான்களே , சீமாட்டிகளே  உங்களுடன் சேர்ந்து கொண்டு மற்ற வலைப்பதிவை  புரட்ட போகிறேன் ...... 

 பின் இணைப்பு

நண்பர் கிங் விஸ்வா இன்று ( 10 /5 /2012 )  அனுப்பியுள்ள அட்டைபடத்திற்கு மிக்க நன்றி