ஞாயிறு, 31 மார்ச், 2013

தமிழ் காமிக்ஸின் நகைச்சுவை தலைப்புக்கள் (part-1)

நண்பர்களே !
காமிக்ஸ் புத்தகங்களுக்கு தலைப்பு வைக்க பல விதங்களில் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க பல வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸின் வித்தியாசமான நகைச்சுவை ததும்பும் தலைப்புக்கள் சிலவைகள்  உங்கள் பார்வைக்காக..!


























இந்த புத்தகங்கள் படிக்க கொடுத்த நண்பர் திருப்பூர் சிபி அவர்களுக்கு மிக்க நன்றி

திங்கள், 25 மார்ச், 2013

புலிவால் பிடித்த கதை

நண்பர்களே!
பிள்ளையார் பிடிக்கபோய் அது குரங்காய் மாறிய கதையாக, லயன் ப்ளாக்கில் பின்னூட்டம் இடவேண்ட்டும் என நினைத்த பொழுது அது என்னை தனியாக பெயர், மின்னஞ்சல் முகவரி,சுயவிபரம் என இழுத்துச்சென்று எனக்கே தெரியாமல் ஒரு புலிவாலை பிடிக்க வைத்துவிட்டது. ஏதோ முக நூல் என ப்ளாக்கையும் நினைத்துக்கொண்டு ஒரு சிறிய கேள்வியை எனது முதல் பதிவில் கேட்டுவைத்தேன் . பதிவு என்பது போட்டால்தான் தெரியும் அதன் கஷ்டம் என சில நாட்களிலேயே புரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புலிவாலைப்பிடித்து இன்றுடன் ஆனந்தமாக ஒருவருடம் உருண்டோடியதும் ஒரு மகிழ்வான தருனங்களாகவே உணருகிறேன்.


முதல் காமிக்ஸ் நண்பராக BPK அலைபேசியில் , இரண்டாவது நண்பர் king viswa திடீரென எனது அலுவலகத்திற்கு விஜயம் இப்படி சில நாட்களிலேயே நண்பர்கள்  வட்டம் அதிகரித்துக்கொண்டது ஒரு புது யுகம் கிடைத்ததுபோல் மகிழ்வு 

எப்போதோ மாதம் ஒரு பதிவிட்டபொழுதிலும் அடிக்கடி வந்து தட்டிக்கொடுத்து பாராட்டிய நட்புக்களால் இந்த புலிவால் இப்பொழுது பழக்கப்பட்ட சர்கஸ் நிகழ்வாகி மகிழ்விக்கிறது.
இந்த இடைப்பட்ட 1 வருடத்தில் நான் இழந்த பல காமிக்ஸ்களை நண்பர்கள் படிப்ப்தற்கு கொடுத்து உதவியது என்றுமே மறக்கமுடியாது

அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
--------------------------------------------------------------------
* நண்பர் புனித சாத்தான் புதியதாக ஒருகட்சி தொட்ங்கியுள்ளார் . வாழ்த்துக்கள் புனித சாத்தான்
* பல மாதங்களாக இங்கு தொங்கிக்கொண்டிருக்கும் ஓட்டெடுப்பு பெட்டியில் தனது முத்திரையை பதிதவர்க்ளுக்கு நன்றி. விரைவில் காமிக்ஸுடன் மற்ற எனது அனுபவங்களையும் உங்களுடன் பகிறமுயல்கிறேன்.

வியாழன், 7 மார்ச், 2013

காமிக்ஸும் ஒரு காதுகுத்தும்

நண்பர்களே!
அலுவலகத்தில் அன்று அதிக பணி இல்லாத காரணத்தினால் வீட்டிற்கு கிழம்பிக்கொண்டிருந்த எனக்கு அப்பொழுது வந்த அலைபேசி அழைப்பில் எனது பால்ய நண்பன் பெயரைக்கண்டதும் மகிழ்வுடன் எடுத்துக் கொண்டே நேரத்தையும் பார்த்தேன், ஏழரை எனக்காட்டியது. எனது காதுக்கும் அந்த எண் பொறுந்தும் என்பதனை நான் அப்பொழுது உணரவில்லை 5 நிமிடம் மகிழ்வான உரையாடலின் நடுவே திடீரென இடதுகாதில் ஈயத்தை காச்சி ஊற்றி அதில் துருப்பிடித்த கடப்பாரையை விட்டு அல்வா கிண்டியது போல ஒரு சுலீர் வலி.... சில மாதங்களாகவே என்னிடம் ஜனவாசம் கேட்டுக்கொண்டிருந்த .மூ.தொ வலி (காது-மூக்கு-தொண்டை) நிரந்தரமாக குடிவந்துவிட்டதோ என ஒரே கணம் 10 பொன்னிகாமிக்ஸை ஒன்றாய் கண்டது போல ஒரு அலரலிட்டேன்.
உரையாடலை உடனே முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
 வலி குறைந்தது போல இருந்தது. இதுவரை வந்தது ஒரு ட்ரைலர்தான் என்பது போல இரவில் முழுவடிவில் மெயின் பிச்சராக வலி மூன்றாம் ஆட்டத்தில் (1.00மணி) என்னை அலரலுடன் எழுப்பியது. என்னங்க காமிக்ஸ் பத்தி கனவு ஏதாவது கண்டிங்களா? என்ற துணைவியிடம் விபரத்தை கூறியதும் அடுத்த அரைமணி நேரத்தில் எனது தங்கைவீட்டுக்காரருடன் என்னை குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தார். இரவு நேரமாதலால் நர்ஸ் ஒரு வலி நிவாரண ஊசி மட்டும் செலுத்தி அனுப்பிவிட்டார். வலி நிவாரண மருந்து வீரியம் அதிகமானதால் வீட்டிற்கு வந்து படுத்த 1 மணி நேரத்தில் பயங்கர பட படப்பு வியர்வை . அது தெரியாமல் சரி இனி ஆளை அவ்வளவுதான் என பயத்தில் கண்டபடி உளர ஆரம்பித்து ஒரு வழியாக விடியும் வேளையில் உறங்க ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் காலை வாயை ஒரு நூலிழை கூட திக்க முடியவில்லை மீறி திறந்தால் கா.மூ.தொ வலி. அதனை சரி செய்ய ஒரு கா.மூ.தொ மருத்துவ நிபுணரை அனுகினேன். 10 நிமிட சோதனையில் ஒரு வேதனையை கூறினார் உங்கள் உமிழ் நீர் சுரப்பியில்தான் பிரச்சனை, 1 வாரத்தில் சரியாகலாம் என்றார். கைப்பிடி போல் இருந்த இரண்டு கரண்டிகளை எனது பற்களின் நடுவில் வைத்து நெம்பு கோல் தத்துவத்தை சோதிப்பவர்போல் பிழந்து பார்த்தார் எனது கூச்சலை சற்றும் மனிதர் கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்த சில நாட்களில் வலி சிறிதும் குறைந்தபாடில்லை இரவு மிக சரியாக 3.00 மணிக்கு வலி ஆரம்பித்துவிடும் 2 மணி நேரம் தொடர்ந்து கர்ண கொடூர பாட்டுக்கச்சேரிதான். ஆரம்பத்தில் அலறிய மை பெட்டர் ஹாப் அடுத்த நாட்களில் அட அதுக்குள்ள 3 மணி ஆயிடுச்சா என்று எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.
எனது பையன் அப்பா அந்த அலாரத்தை 6மணிக்கு மாத்தி வைங்கப்பா என தூக்கத்தில் பிதற்றினான்
இரண்டு , மூன்றாம் , நான்காம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் எதற்கும் இந்த மருத்துவரிடமும் ஒரு ஆலோசனை கேட்டு வாருங்கள் என கடிதத்தை நீட்டினார் கா.மு.தொ மருத்துவ நிபுணர் .
மீண்டும் அதே நெம்புகோல் தத்துவ செயல் பாட்டிற்கு பின் சிரித்துக் கொண்டே புதிய மருத்துவர் உங்களுக்கு கா.மு.தொ பிரச்சனை இல்லை பல்லில் தான் பிரச்சனை இதற்கு நான் பார்க்க முடியாது. ஒரு சிறந்த பல் மருத்துவரை பாருங்கள் என கூறி பதிவுக்கட்டணம் (!) , அட்டைக்கட்டணம் (?) , மருத்துவக்கட்டணம் என கறந்துவிட்டு அனுப்பினார்.
டோக்கன் இல்லாமல் செல்லும் தந்திரத்தை தொரிந்து வைத்திருந்ததால் பல் மருத்துவரை உடனடியாக பார்க்க முடிந்தது . பரிசோதித்த பெண் மருத்துவர் சார் உங்களுக்கு பல் அனைத்தும் நல்ல நிலையில் தான் உள்ளது . ஆனால் இடது கீழ் கடைசி கடவாய்ப்பல் மேலே இடிக்கிறது அதனை பிடுங்கினால் தான் நீங்கள் இனி வாயே திறக்க முடியும் என ஒரு குண்டை தூக்கி போட்டார். ஏற்கனவே BPK பதிவில் கதிகலங்கிப்போனது அந்த நேரத்தில் நினைவில் வந்து பீதியை கிளப்பியது. சரி 2 நாட்களில் திரும்பி வருகிறேன் என கூறியபொழுது சார் ஏற்கன்வே தாமதம் இன்னும் தாமதித்தால் பிரச்சனை இன்னும் அதிகமாகும் என மிரட்டிப்பார்த்தார்
தப்பித்து வெளிவந்தவன் அடுத்த பல் டாக்டரை பார்த்தேன் .

அவர் உங்களின் பிரச்சனை பல் இல்லை அதிக மன அழுத்தம்தான் எனவே நீங்க ஒரு நல்ல..... அவர் சொல்லி முடிப்பதற்குள் மனதிற்குள் சரி இனி இதயம் சம்பத்தப்பட்ட மருத்துவர் மட்டும்தான் பாக்கி அவரையும் பார்த்து விட்டால் ஒரு முழு உடல் பரிசோதனை பார்த்த தாகிவிடும் எண்ணிக்கொண்டு வெளிவந்தேன் அப்பொழுது கையில் இருந்த கைபேசி எனது ரிங்க் டோனான " குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா"என்ற M.S.சுப்பு லட்சுமியின்  குரலில் ஒலிக்க எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியாமல் நகர்ந்தேன்
அதன் பின் ஹோமியோபதி , அலோபதி என பல பார்த்தும் பலனலிக்காமல் இருந்த நிலையில்
கோடானகோடி இரகசியங்களை உள்ளடக்கிய எனது புதிர்களை மனிதர்கள் நீங்கள் அறிவது கடினம் எனும்வகையில் தானாகவே படிப்படியாக எனது வலி குறைந்து இன்று 70 சதவீதம் சரியாகிவிட்டது.


 
நடுப்பட்ட இந்த 10 நாள் ஓய்வில் விஸ்வரூபம் படம் பார்த்தேன். அன்று இரவு கனவில் தாலிபான் பிரச்சனை ஓய்ந்தால் தான் உங்கள் காதுவலி சரியாகும் என்ற ஒரு கெட்ட அசிரீரி ....
அடுத்த நாள் நண்பர் சிபியிடம் படிக்க வாங்கிய கொரில்லா சாம்ராஜ்யத்தை படித்த பொழுது அன்று இரவு கனவில் இரும்புக்கை மாயாவி தனது துப்பாக்கி விரலை எனது  கடவாயில் விட்டு ஆட்டுவதுபோல ஒரு கனவு .. எல்லாம் அந்த அதிக்ப்படியான வலி நிவாரணி மருந்துக்களின் ஆதிக்கம் என அறிந்து கொண்ட பின்னர் பொழுது போக்கையும் கைவிட்டேன்.
கொரில்லா சாம்ராஜ்யம்

கொரிலாக்களின் சக்தி அனைத்தையும் மனிதன் அடையும் விதத்தில் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி.
விஞ்ஞானி யிடம் அதே கொரிலாக்கள் அதே பாணியை பின்பற்றி மனித சக்தியை அவைகள் பெற்றுக்கொள்கின்றன . பின்னர் தனக்கென ஒரு சாம்ராஜ்த்தை நிறுவி மனிதனை அடிமைகொள்கின்றது இதனை தனது இரும்புக்கரம் கொண்டு மாயாவி எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் கதை
அதி அற்புதமான வண்ண ஓவியத்தில் வெளிவந்துள்ள முத்துவின் 25 வது வெளியீடு . இன்றும் படிப்பதற்கு விறு விறுப்பாகவே உள்ளது.சமீபத்தில் வெளிந்த " Rise of the Planet of the Apes" ஆங்கில திரைப்படம்   இந்த கதையின் தலுவலாக தெரிகிறது.


 
மதியில்லா மந்திரி
மொழிபெயர்ப்பு போட்டியில் பங்குபெற்ற  மதியில்லாமந்திரியின் கதை 1992 இல் நமது வாண்டு மாமா மொழிபெயர்ப்பில் வானதிபதிப்பகம் அதே சித்திரங்களுடன் சிறுகதையாக எழுத்துவடிவில் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் இன்னும் இரு மதியில்லா மந்திரி கதைகளும் உள்ளன.

நன்றி நண்பர்களே ! மீண்டும் சந்திப்போம்

வியாழன், 31 ஜனவரி, 2013

கோவை ஸ்டீல்க்ளாவுடன் ஒரு "மரண சர்க்கஸ்"

குடியரசு தினத்தன்று கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்கலாமென கோவையில் நடைபெற்ற மின் மற்றும் மின்னியல் துறை சம்பந்தமான வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சரி போகிறவாக்கில் "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா " வைசந்தித்து பல மாதங்களாகிற்றே என ஒரு சந்திப்பிற்கு நேரம் வகுத்தேன். மனிதர் 3.30க்கு சரியாக பிக்கப்பிற்கு வந்துவிட்டார்.
இரும்புக்கை மாயாவியை ஆசிரியர் விஜயன் மூட்டைகட்டிவிட்டதால் அந்த சோகத்தில்  கார்சன் கட்சிக்கு தாவும் விதத்தில் தாடிவளர்க்க ஆரம்பித்துவிட்டாராம் நமது கோவைக்காரர்.  தனது குதிரையில் (பல்ஸர்) என்னை அமர்த்திக்கொண்டு தனது இல்லத்திற்கு அழைத்து சென்றார். காமிக்ஸ் பற்றிய பேச்சு வந்த பொழுது புத்தகங்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் பாதுகாப்பு அதிகம் என்றும் சேலஞ் செய்தார். புரியாமல் விழித்துக்கொண்டிருந்த எனக்கு அதன் அர்த்தம் அவர் வீட்டு வாசற்கதவை அடைந்தபொழுதுதான் புரிந்தது .
மிகப்பெரிய இரும்புக்கோட்டையின் வாசல் அருகே கருப்புக்கலரில் ஒரு பைரவன் காவல்  இருக்க பார்த்து வாருங்கள் என அசால்ட்டாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்   இதைப்போல எத்தனை பார்த்திருப்பேன் என நினைத்து  பந்தாவாக உள்ளே நுழைந்த எனக்கு அடுத்த அதிர்ச்சியாக மற்றுமொரு நாலுகால் நண்பர் வரவேற்பு . " இதற்கே பயந்தால் எப்படி இன்னும் 7 பாக்கியிருக்கு" என்று அவர் கூறியபொழுது உண்மையாலுமே எனக்கு  உதரலெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு நாலுகால் பாதுகாவலர் சல்யூட் அடிக்க அவரது வீடு கம் அலுவலகத்தை அடந்தேன்.

இப்ப சொல்லுங்க என்னோட காமிக்ஸை யாராவது கைவக்க முடியுமா? என்று சொன்னபடியே தனது புத்தக சேகரிப்பை எடுத்து காண்பித்தார் . அதனை பார்வையிட்ட எனக்கு இந்த 7 புத்தகத்திற்குதான் 9 நாய் காவலா என நான் நற... நறக்க.... மனிதர் அதனை கண்டுக்காமல் லார்கோ ரேஞ்சுக்கு தனது ஷேர் மார்க்கட் தொழில் பற்றியும் சென்சக்ஸ் புள்ளிகளைபற்றியும் அள்ளி விளாசினார். சின்டெக்ஸ் டேங்க் பற்றி மட்டுமே தெரிந்த என்னை பார்த்து இறுதியாக "புரிந்ததா " என்று கேட்டபொழுது உங்கள் பின்னூட்டத்தைவிட  இது புரிகிறது என சொல்லிவைத்தேன். அவருடைய தாயாரின் அன்பான உபசரிப்புக்கு பின்னர் பழய புத்தக கடையை பார்த்து வர ஆயத்தமானோம்

. போகும் வழியில் பாதியில் குதிரை நின்றுவிட ..சிரித்தாவாரே குதிரைக்கு புல்லு வைக்க மறந்துட்டேன் என பெட்ரோல் கிணறு தேடி ஓட்டிக்கொண்டு போனார். எங்கே குதிரையை நம் தலையில் கட்டிவிடுவாரோ என ரோட்டுக்கு மறுபக்கம் ஒன்றுமறியாதவனாக நடக்க ஆரம்பித்தேன்

மாலை சிற்றுண்டிக்காக  இந்தா இந்தா  என 15 கிலோ மீட்டர் தள்ளியுள்ள சாந்திகீர்ஸ் கேண்டீனுக்கு அழைத்து சென்றார். மிக குறைந்த விலையில் ( உ.ம் -ரொமாலியன்ரொட்டி+பன்னீர் பட்டன் = 40 மட்டுமே) மிகத்தரமான , சுவையுடன் சுத்தமாகவும் இருந்தது. கூட்டம் சினிமா தியேட்டர் போல அலைமோதியது ( இது குறித்து ஒரு பதிவே போடலாம்)

கிளம்பும் போது 7 மணி"ஈரோ-100" பேருந்தை பிடிக்க முடியுமா ?( கோவை  to ஈரோடு இடை நில்லா மற்றும் நடத்துனர் இல்லா பேருந்து ) என  கேட்ட பொழுது எனது நாக்கில் 7.5 குடியிருந்ததை நான் அறியவில்லை. ஹோப் கல்லூரியிலிருந்து குதிரையை ஓட்ட ஆரம்பித்தவர்  அந்த மாலை நேர நெறிசலிலும் 85 ஐ எட்டியபொழுது  எனது அடிவயிற்றில் அண்டா அண்டாவாக புளியை கரைத்து ஊற்றியது. நடு நடுவே கால் தொடைகள் நடு ரோட்டை கூட்டாத குறையாக தொட்ட பொழுது காலையில் படித்த ராசிபலன்வேறு கண்முன்னே டான்ஸ் ஆடி படுத்தியது.
இந்த நிலையிலும்  நான் தான் லார்கோவில் வரும்  சைமன்  உங்களை க்ளை மேக்ஸில் பத்திரமாக சேர்ப்பது உறுதி என ஸ்டீல்க்ளா வீர சபதமிட்டபோது " தேவுடா காமிக்ஸை ஒவரா படிச்சு நம்மள இந்த உலகத்தைவிட்டே அனுப்ப முடிவு பன்னிட்டானே நாமெல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பான்னு " மனதில் புலம்பியவாரே , உருப்படியா கைகால் இருந்தால் 100 தேங்காய் உடைப்பதாய் பெயர்தெரியாத சாமிக்கு வேண்டிக்கொண்டேன். ஒரு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்த பொழுது வண்டி முள் மட்டும் ஜீரோவாக வில்லை தேங்காயும்தான் :).
 இந்த மாதிரி ஒரு அசுரப்பயணத்தில் அருகில் வருபவர்கள் வாயில் எப்படி வாழ்த்து செய்திகள் வரும் என்பதனையும் சிக்னல், ஒன்வே இவற்றை எப்படி மிதிக்க வேண்டும் என்பதனையும் போனஸாக கற்றுக்கொண்டேன். 6 நிமிடங்களில் இந்த டிராபிக்கில் 8 கிலோ மீட்டரை  எப்படி கடக்கலாம் என்பதற்கு இந்த இரும்பு மனிதரிடம் டியூஷன் கற்கலாம். 10 நிமிடம் முன்னதாக பேருந்தில் ஏற்றி விட்ட வெற்றி களிப்பில் அவர் வாங்கி கொடுத்த சோடாவில் முகம்கழுவியபடி ஈரோடு புறப்பட்டேன் அவரின் அன்பளிப்பு காமிக்ஸுடன் ( உறைபனி மர்மம்).
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பது எப்படி என்பதனையும் உபசரிப்பில் எப்படி முன்னிற்பது என்பது பற்றியும்  இந்த அன்பு நண்பரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்
நன்றி ஸ்டீல்க்ளா (எ) பொன்ராஜ்.
                        இது தான் கார்சன் தாடியாம் ( என்ன கொடுமை சார்....)            
                                    
                                      இரும்புக்கோட்டை யின் முதல் காவலன்
                                          வீட்டின் வரவேற்பரை காவலன்

                                     
                                                    முதல் மாடி காவலர்

                                                  இரண்டாம் தளக்காவலர்

பின்பக்கக் காவல்
                                      
                                      இந்த புத்தகத்திற்குத்தான் அப்படி ஒரு பில்டப்பா?

அற்புத இதழ் சதிவலையுடன்
                      காமிக்ஸ் இல்லா உக்கடம் பழய இதழ்கள் அங்காடித்தெரு

 உங்கள் வண்டி சர்வீசுக்கு விடும்போது சொல்லுங்க மறுபடியும் வறேன். அதுவரைக்கும் புனிதச்சாத்தானையும் ஆடிட்டரையும் அனுப்பி வைக்கிறேன்