வியாழன், 31 ஜனவரி, 2013

கோவை ஸ்டீல்க்ளாவுடன் ஒரு "மரண சர்க்கஸ்"

குடியரசு தினத்தன்று கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்கலாமென கோவையில் நடைபெற்ற மின் மற்றும் மின்னியல் துறை சம்பந்தமான வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சரி போகிறவாக்கில் "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா " வைசந்தித்து பல மாதங்களாகிற்றே என ஒரு சந்திப்பிற்கு நேரம் வகுத்தேன். மனிதர் 3.30க்கு சரியாக பிக்கப்பிற்கு வந்துவிட்டார்.
இரும்புக்கை மாயாவியை ஆசிரியர் விஜயன் மூட்டைகட்டிவிட்டதால் அந்த சோகத்தில்  கார்சன் கட்சிக்கு தாவும் விதத்தில் தாடிவளர்க்க ஆரம்பித்துவிட்டாராம் நமது கோவைக்காரர்.  தனது குதிரையில் (பல்ஸர்) என்னை அமர்த்திக்கொண்டு தனது இல்லத்திற்கு அழைத்து சென்றார். காமிக்ஸ் பற்றிய பேச்சு வந்த பொழுது புத்தகங்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் பாதுகாப்பு அதிகம் என்றும் சேலஞ் செய்தார். புரியாமல் விழித்துக்கொண்டிருந்த எனக்கு அதன் அர்த்தம் அவர் வீட்டு வாசற்கதவை அடைந்தபொழுதுதான் புரிந்தது .
மிகப்பெரிய இரும்புக்கோட்டையின் வாசல் அருகே கருப்புக்கலரில் ஒரு பைரவன் காவல்  இருக்க பார்த்து வாருங்கள் என அசால்ட்டாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்   இதைப்போல எத்தனை பார்த்திருப்பேன் என நினைத்து  பந்தாவாக உள்ளே நுழைந்த எனக்கு அடுத்த அதிர்ச்சியாக மற்றுமொரு நாலுகால் நண்பர் வரவேற்பு . " இதற்கே பயந்தால் எப்படி இன்னும் 7 பாக்கியிருக்கு" என்று அவர் கூறியபொழுது உண்மையாலுமே எனக்கு  உதரலெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு நாலுகால் பாதுகாவலர் சல்யூட் அடிக்க அவரது வீடு கம் அலுவலகத்தை அடந்தேன்.

இப்ப சொல்லுங்க என்னோட காமிக்ஸை யாராவது கைவக்க முடியுமா? என்று சொன்னபடியே தனது புத்தக சேகரிப்பை எடுத்து காண்பித்தார் . அதனை பார்வையிட்ட எனக்கு இந்த 7 புத்தகத்திற்குதான் 9 நாய் காவலா என நான் நற... நறக்க.... மனிதர் அதனை கண்டுக்காமல் லார்கோ ரேஞ்சுக்கு தனது ஷேர் மார்க்கட் தொழில் பற்றியும் சென்சக்ஸ் புள்ளிகளைபற்றியும் அள்ளி விளாசினார். சின்டெக்ஸ் டேங்க் பற்றி மட்டுமே தெரிந்த என்னை பார்த்து இறுதியாக "புரிந்ததா " என்று கேட்டபொழுது உங்கள் பின்னூட்டத்தைவிட  இது புரிகிறது என சொல்லிவைத்தேன். அவருடைய தாயாரின் அன்பான உபசரிப்புக்கு பின்னர் பழய புத்தக கடையை பார்த்து வர ஆயத்தமானோம்

. போகும் வழியில் பாதியில் குதிரை நின்றுவிட ..சிரித்தாவாரே குதிரைக்கு புல்லு வைக்க மறந்துட்டேன் என பெட்ரோல் கிணறு தேடி ஓட்டிக்கொண்டு போனார். எங்கே குதிரையை நம் தலையில் கட்டிவிடுவாரோ என ரோட்டுக்கு மறுபக்கம் ஒன்றுமறியாதவனாக நடக்க ஆரம்பித்தேன்

மாலை சிற்றுண்டிக்காக  இந்தா இந்தா  என 15 கிலோ மீட்டர் தள்ளியுள்ள சாந்திகீர்ஸ் கேண்டீனுக்கு அழைத்து சென்றார். மிக குறைந்த விலையில் ( உ.ம் -ரொமாலியன்ரொட்டி+பன்னீர் பட்டன் = 40 மட்டுமே) மிகத்தரமான , சுவையுடன் சுத்தமாகவும் இருந்தது. கூட்டம் சினிமா தியேட்டர் போல அலைமோதியது ( இது குறித்து ஒரு பதிவே போடலாம்)

கிளம்பும் போது 7 மணி"ஈரோ-100" பேருந்தை பிடிக்க முடியுமா ?( கோவை  to ஈரோடு இடை நில்லா மற்றும் நடத்துனர் இல்லா பேருந்து ) என  கேட்ட பொழுது எனது நாக்கில் 7.5 குடியிருந்ததை நான் அறியவில்லை. ஹோப் கல்லூரியிலிருந்து குதிரையை ஓட்ட ஆரம்பித்தவர்  அந்த மாலை நேர நெறிசலிலும் 85 ஐ எட்டியபொழுது  எனது அடிவயிற்றில் அண்டா அண்டாவாக புளியை கரைத்து ஊற்றியது. நடு நடுவே கால் தொடைகள் நடு ரோட்டை கூட்டாத குறையாக தொட்ட பொழுது காலையில் படித்த ராசிபலன்வேறு கண்முன்னே டான்ஸ் ஆடி படுத்தியது.
இந்த நிலையிலும்  நான் தான் லார்கோவில் வரும்  சைமன்  உங்களை க்ளை மேக்ஸில் பத்திரமாக சேர்ப்பது உறுதி என ஸ்டீல்க்ளா வீர சபதமிட்டபோது " தேவுடா காமிக்ஸை ஒவரா படிச்சு நம்மள இந்த உலகத்தைவிட்டே அனுப்ப முடிவு பன்னிட்டானே நாமெல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பான்னு " மனதில் புலம்பியவாரே , உருப்படியா கைகால் இருந்தால் 100 தேங்காய் உடைப்பதாய் பெயர்தெரியாத சாமிக்கு வேண்டிக்கொண்டேன். ஒரு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்த பொழுது வண்டி முள் மட்டும் ஜீரோவாக வில்லை தேங்காயும்தான் :).
 இந்த மாதிரி ஒரு அசுரப்பயணத்தில் அருகில் வருபவர்கள் வாயில் எப்படி வாழ்த்து செய்திகள் வரும் என்பதனையும் சிக்னல், ஒன்வே இவற்றை எப்படி மிதிக்க வேண்டும் என்பதனையும் போனஸாக கற்றுக்கொண்டேன். 6 நிமிடங்களில் இந்த டிராபிக்கில் 8 கிலோ மீட்டரை  எப்படி கடக்கலாம் என்பதற்கு இந்த இரும்பு மனிதரிடம் டியூஷன் கற்கலாம். 10 நிமிடம் முன்னதாக பேருந்தில் ஏற்றி விட்ட வெற்றி களிப்பில் அவர் வாங்கி கொடுத்த சோடாவில் முகம்கழுவியபடி ஈரோடு புறப்பட்டேன் அவரின் அன்பளிப்பு காமிக்ஸுடன் ( உறைபனி மர்மம்).
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பது எப்படி என்பதனையும் உபசரிப்பில் எப்படி முன்னிற்பது என்பது பற்றியும்  இந்த அன்பு நண்பரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்
நன்றி ஸ்டீல்க்ளா (எ) பொன்ராஜ்.
                        இது தான் கார்சன் தாடியாம் ( என்ன கொடுமை சார்....)            
                                    
                                      இரும்புக்கோட்டை யின் முதல் காவலன்
                                          வீட்டின் வரவேற்பரை காவலன்

                                     
                                                    முதல் மாடி காவலர்

                                                  இரண்டாம் தளக்காவலர்

பின்பக்கக் காவல்
                                      
                                      இந்த புத்தகத்திற்குத்தான் அப்படி ஒரு பில்டப்பா?

அற்புத இதழ் சதிவலையுடன்
                      காமிக்ஸ் இல்லா உக்கடம் பழய இதழ்கள் அங்காடித்தெரு

 உங்கள் வண்டி சர்வீசுக்கு விடும்போது சொல்லுங்க மறுபடியும் வறேன். அதுவரைக்கும் புனிதச்சாத்தானையும் ஆடிட்டரையும் அனுப்பி வைக்கிறேன்